Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

சிறுவர் பாட்டு

சாரணா கையூம்

--------------------------------------

கவிஞர் திலகம்

அப்துல் காதிர் லெப்பை அவர்களின்

மனம் குளிர்ந்த ஆசி...

கவிதைத் துறையிலும், என் சிந்தனைகளில் ஆர்வங் காட்டுவதிலும் எனது மாணவர்களில் முன்னிற்பவர், ஜனாப் என். எஸ். ஏ. கையூம். இவர் இன்று 'சாரணா கையூம்' என்ற புனைபெயரில் பத்திரிகையில் கவிதைகள், கட்டுரைகள், கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார். இவரது ஆக்கங்களைத் தமிழ்நாட்டுச் சஞ்சிகைகளும் பிரசுரித்து வருகின்றன. இதுவரை, என்னோடு சிந்தனைத் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறார். எனக்கு இது ஒரு மன ஆறுதலைத் தருகிறது.

- என் சரிதை: பக்கம் 89

----------------------------------------------

சிறுவர் பாட்டு

சாரணா கையூம்

தமிழ் மன்றம்

கல்ஹின்னை, கண்டி.

-------------------------------------------------

CIRUVAR PAATTU

(Poems for Children 8 - 12)

By SAARANAA KAIYOOM

(Trained Teacher)

Author of:

Nabikal Naayakam

Qur'an Hadees

Kulanthai Ilakkiyam

Kavithai Nencham

(c) Copyright reserved

First Edition in May 1983

Fourteenth publication of:

THAMIL MANRAM

Galhinna, Kandy,

Sri Lanka.

Printed at:

Developrint

69, Albion Road,

Colombo - 9.

---------------------------------------------------

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தமிழ்ச் சேவைப் பணிப்பாளர், இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனப் பணிப்பாளர்,

கலாநிதி கே. எஸ். நடராஜா, M. A. Ph. D.

உவந்தளித்த

அணிந்துரை

குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதிலும் பார்க்கப் பாட்டுச் சொல்லிக் கொடுப்பது சுலபம். பாடம் என்று படிப்பதை விடப் பாட்டுப் பாடுவதைத்தான் குழந்தைகள் அதிகம் விரும்புகிறார்கள். அதனால், பாட்டு மூலம் படிப்பினைகளைப் பாலர் மனத்திலே பதிய வைத்து விடுவது இலகுவாயுள்ளது.

சிறுவர்களின் மழலை மொழியின் சுவை, அவர்கள் சொல்லிலும் பாட்டிலே இனிப்பது போலப் பேச்சிலே தொனிப்பதில்லை. அந்த மழலை இன்பத்தைச் சிறுவர் பாடல்களே எமக்கு வாரித் தருகின்றன.

பாலர் பாடல் எழுதும் கலை, எல்லாக் கவிஞர்களுக்கும் கைவந்து விடுவதில்லை. குழந்தைகளின் வாய்க்கு வரத்தக்க சொற்களை உபயோகித்தே அவர்களுக்குப் பாடல் எழுத வேண்டும்; அச்சொற்களும் அவர்களின் சுற்றாடலில் வழங்குஞ் சொற்களாகத் தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும். பாடலுக்குத் தேர்ந்தெடுக்கும் பொருளும் அவர்களுக்குப் பழக்கமானவையாய் இருக்க வேண்டும்.

இத்தனை அம்சங்களையும் கவனத்திற் கொண்டே "சாரணா கையூம்" இந்தச் 'சிறுவர் பாட்டு' நூலை செய்திருக்கிறார். குழந்தைகள் இலகுவிற் பாடிப் அழகத்தக்க சந்தங்களில் இப்பாடல்கள் அமைந்திருப்பது, ஆசிரியரின் 'குழந்தைக் கவி' ஆற்றலைப் புலபடுத்தி நிற்கிறது. சிறுவர்கள் பாடுவதற்கு ஏற்ற பாடல்கள் இப்பொழுதெல்லாம் கிடைப்பதில்லை என்ற குறையை இந்நூல் போக்கிவிடும் என்பதில் ஐயமில்லை.

கே. எஸ். நடராஜா

8, மும்தாஸ் மஹால் வீதி,

கொழும்பு - 6.

--------------------------------------------

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

எம். ஏ., ஓ. எல்., பிஎச். டி.,

அவர்கள் வழங்கிய

பாராட்டுரை

"சிறுவர் பாட்டு" குழந்தைகட்கு ஏற்ற எளிய பாடல்களாக அமைந்துள்ளது. குழந்தைகள் வாய்விட்டுப் படித்து மகிழ்ச்சியடையும் என்பதில் சந்தேகமில்லை.

நண்பர் சாரணா கையூம் அவர்களின் முயற்சி பாராட்டத்தக்கது. இது போல பா நூல்களைக் குழந்தைகளுக்கு அளிப்பாராக.

மா. இராசமாணிக்கனார்

சென்னைப் பல்கலைக்கழகம்

சென்னை.

---------------------------------------------------

இன்றையத் தேவை

அதிகம் அதிகமான சிறுவர் நூல்கள் இன்று தேவைப்படுகின்றன. கால் நூற்றாண்டுக் காலமாக சிறுவர் இலக்கியம் படைப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்ற கவிஞர் சாரணா கையூம், காலத்தின் தேவையை உணர்ந்து சிறுவர் பாடல் நூலை எழுதியுள்ளார்.

பாடசாலையில் படித்துவிட்டு வீடு திரும்பிய பின்னர், பிள்ளைகள் ஓய்வாய் இருக்கும் நேரத்தில், பெற்றோரும் பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்கக் கூடிய விதத்தில் இப்பாடகள் அமைந்துள்ளன. குறிப்பாகத் தாய்மார்கள், தனியாக இருக்கும் சமயத்தில் பிள்ளைகளுக்கு இப்பாடல்களைப் படித்துக் காட்டலாம்; சேர்ந்து பிள்ளைகளையும் படிக்கச் சொல்லலாம். தமது இளமைக் காலத்தின் இனிய நினைவுகள் திரும்புவதற்கு அதனால் வழியாகும். சிறாரும், கல்வியில் ஊக்கம் கொள்வதற்கு வகை ஏற்படும்.

நாம் பிரசுரித்துள்ள நூல்கள் அனைத்திற்கும் அமோக வரவேற்புத் தந்துள்ள தமிழறிந்த மக்கள், இந்த நூலைப் பெரிதும் விரும்பி ஏற்றுக் கொள்வர் என நம்புகிறோம்.

எஸ். எம். ஹனிபா

27/1, Beach Road,

Mount Lavinia.

-------------------------------------------

என்னுரை

'சிறுவர் பாடல்' என்னும் இந்நூல் சிறுவர்களுக்காக நான் இயற்றியுள்ள இரண்டாவது நூலாகும்.

சிறுவர்களின் உளப்பான்மைக்கும் வயதிற்கும் ஏற்றாற்போல் பாடல்களை இயற்றுவது எளிதான காரியமல்ல. ஒரு குழந்தைக் கவிஞன் தானுமொரு குழந்தையென்ற நிலையிலிருந்தே பாட வேண்டியிருக்கின்றது. இதற்கு அநுபவமும் ஆற்றலும் தேவை.

இத்துறையில் அழ. வள்ளியப்பா சிறந்த இடத்தை வகிக்கின்றார். அவரது பாடல்களைப் பாடாத பள்ளிப் பிள்ளைகளே இல்லையெனலாம்.

இத்தொகுப்பிலுள்ள பாடல்களைச் சிறுவர்கள் பாடிப் புரிந்து கொள்ளக் கூடிய இனிய எளிய தமிழில் எழுதியுள்ளேன். இப்பாடல்கள் பெரும்பாலும் அவ்வப்போது சிறுவர்களுக்காக இயற்றியவைகளாகும்.

இந்நூல் வெளிவருவதற்கு எனக்கு ஆர்வத்தை ஊட்டியவர், முன்னைய சஞ்சிகை ஆசிரியர், பத்திரிகையாளரும் வெளியீட்டாளரும், எழுத்தாளரும், நூலாசிரியருமான சட்டத்தரணி அல்ஹாஜ். எஸ். எம். hஅனிபா B. A. (Cey) அவர்களாகும். அன்னார்க்கு எனது உளம் கனிந்த நன்றிகள். ஆசியுரை வழங்கிய காலஞ் சென்ற பேராசிரியர் டாக்டர் மா. இராசமாணிக்கனார், M. A., L. T., M. O. L., Ph. D., அவர்களுக்கும் அணிந்துரை தந்துள்ள கலாநிதி கே. எஸ். நடராஜா அவர்களுக்கும் என் நன்றி.

சாரணா கையூம்,

162/5, லோவர் வீதி,

பதுளை.

--------------------------------------------------

அரசே போற்றி

அரசர்க் கரசே அரசே போற்றி

ஆதி முதல்வா அரசே போற்றி

இன்னல் களையும் அரசே போற்றி

ஈகைத் தருவே அரசே போற்றி

உண்மை நீயே அரசே போற்றி

ஊன் உருவிலா அரசே போற்றி

எனையாள் பரம்பொருளே அரசே போற்றி

ஏழைக் கருளும் அரசே போற்றி

ஐயனே நேசனே அரசே போற்றி

ஒன்றென்ற பொருளே அரசே போற்றி

ஓய்வின்றி இயங்கும் அரசே போற்றி

ஔஷத மாமருந்தே அரசே போற்றி

-------------------------------------------------

அசைந்தாடு

அசைந்தா டம்மா அசைந்தாடு

ஆசைக் கிளியே அசைந்தாடு

இசையோ டொன்றாய் அசைந்தாடு

ஈரக் குலையே அசைந்தாடு

உதய நிலாவே அசைந்தாடு

ஊதும் குழலே அசைந்தாடு

எழிலாய் வந்து அசைந்தாடு

ஏற்றத் தேடு அசைந்தாடு

ஐயம் விட்டு அசைந்தாடு

ஒழுக்கம் பேணி அசைந்தாடு

ஓவிய நூலே அசைந்தாடு

ஔவிய மின்றி அசைந்தாடு

-------------------------------------------------------

ஆட்டுக்குட்டி

துள்ளி வரும் ஆட்டுக்குட்டி

துணிந்து வரும் ஆட்டுக்குட்டி

பள்ளி செல்ல வருவயோ?

பாடம் சொல்லித் தருவையோ?

கள்ளம் இல்லை உன்மனத்தில்

கபடம் இல்லை உன்மனத்தில்

பள்ளம் மேடு எதுவந்தாலும்

பாய்ந்து ஓடும் ஆட்டுக்குட்டி.

தொல்லை இல்லா ஆட்டுக்குட்டி

தோல் கறுத்த ஆட்டுக்குட்டி

சொல்லைக் கேட்டு வீட்டையே

சுற்றி வரும் ஆட்டுக்குட்டி.

--------------------------------------------------------

இல்லையே

பதுங்கிப் பார்க்குதே - புலி

பதுங்கிப் பார்க்குதே,

ஒதுங்கிச் செல்லவே - என்னால்

இயல வில்லையே.

ஆரும் இல்லையே - குரல்

கேட்க வில்லையோ,

பாரில் என்னைப்போல் - ஒரு

பாவி இல்லையே.

வேக மாகவே - குகை

வாசல் நோக்கியே,

சாக டிக்கவே - என்னை(க்)

கூட்டிச் செல்லுதே.

ஆட்டுக் குட்டிநான் - வயது

ஆறு வாரமே,

மீட்க வாருங்கள் - ஐயா

மீட்க வாருங்கள்.

----------------------------------------------------------

ஊஞ்சல்

ஆல மரத்து ஊஞ்சலாம்

அமர்ந்து ஆடிப் பாடலாம்

காலை உயர நீட்டியே

கீழும் மேலும் ஆடலாம்.

விண்ணை நோக்கிப் போகலாம்

வடக்குத் தெற்குப் பார்க்கலாம்

பண் இசைத்துப் பாடலாம்

பகல் முழுதும் ஆடலாம்.

பழக்க மில்லாப் பிள்ளைகள்

பையப் பைய ஆடலாம்

பழக்கமான போதிலே,

பறந்து விண்ணில் ஆடலாம்.

--------------------------------------------

எலிகள்

எலிகள் எலிகள் எலிகளாம்

எங்கும் ஒரே எலிகளாம்.

நெல்லு வைத்த பெட்டியை

நெருங்கி வந்து பற்களால்,

அல்லும் பகலும் சுரண்டியே

ஓட்டை போடும் எலிகளாம்.

மறந்து ஏதும் வைத்திடில்

மாய மாகச் சென்றிடும்

திருட்டு வேலை செய்வதில்

திறமை யான எலிகளாம்.

ஆனை போன்ற பொருளையும்

அழிக்க வல்ல எலிகளாம்

பூனை வந்து சேர்ந்ததும்

பதுங்கி ஓடும் எலிகளாம்.

-------------------------------------------------

ஏனோ கோபம்?

அண்ணா, அண்ணா ஓடிவா

அருமை அண்ணா ஓடிவா

அண்ணா நீயும் நில்லாமல்,

அருகில் கொஞ்சம் ஓடிவா.

என்னுடன் ஆடிப் பாடவே

எங்கும் சுற்றிப் பார்க்கவே

உன்னை நானும் அழைக்கிறேன்,

உள்ளம் கொண்டு ஓடிவா.

சின்ன வீடு கட்டிடுவோம்

சிறிய பொம்மை செய்திடுவோம்

என்ன அண்ணா நீயகே

எழுதிக் கொண்டு இருக்கிறாய்?

தங்கை மனமும் நோகுதே

தயவாய் இங்கே ஓடிவா

எங்கே இன்னும் வரவில்லை,

ஏனோ கோபம் என்மீதே!

-------------------------------------------------

அப்பம்

அம்மா சுட்ட அப்பம் - மிக

அருமை யான அப்பம்,

சும்மா சொல்ல வில்லை - தேன்

சேர்ந்த சுவை அப்பம்.

ஒன்று தின்றதங்கை - இன்னும்

ஒன்று கேட்டு அழுதாள்,

நன்று என்று சொல்லி - அம்மா

நாலு அப்பம் தந்தாள்.

அன்னை அன்பைச் சொல்லி - தங்கை

ஆடிப் பாடி நின்றாள்,

என்ன சொன்ன போதும் - அவள்

எங்கள் அன்னை தானே.

--------------------------------------

காக்கை

கரிய நிறமந்தக் காக்கை - தம்பி

கவனித்துப் பாரதன் போக்கை,

உரிய பொழுதந்தக் காலை - எம்மை

எழுப்பும் தொழிலதன் கடமை.

அழுக்குப் பொருளதக் கண்டு - தன்

இனத்தை அழைத்தே உண்டு,

முழுமை பெறுகின்ற பறவை - தம்பி

முன்னின்று பாரதன் உறவை.

மாலை மனைபுகு முன்னே - தினம்

மகிழ்ந்து குளித்திட்ட பின்னே,

சோலை குலுங்கிடப் பாடி - தம்பி

சேர்ந்து பறந்திடும் கூடி.

---------------------------------------------

கிளி

பச்சை கிளி பேசுது

பறந்து செல்ல அழைக்குது.

சிவந்த நிறச் சொண்டினால்

சின்னப் பழம் தின்னுது,

அவனி யெல்லாம் தனதென்று

ஆடிப் பாடிச் சொல்லுது.

சிற கடிக்க நினைக்குது

சீறும் பூனை பார்க்குது

இறங்கி ஓட நினைக்குது

இரும்புக் கூடு தடுக்குது.

சிந்தை நொந்து கலங்குது

சிறுமை கண்டு சிரிக்குது

விந்தயான மனிதனின்

விருப்பம் கண்டு ஒதுங்குது.

----------------------------------------------

கீதம் பாடுமே

வண்ண, வண்ணப் பூக்களில்

வண்டு வந்து மொய்க்குமே

எண்ணம் போல மதுவுண்டு,

இனிய கீதம் பாடுமே.

சிவந்த சொண்டை நீட்டியே

சின்னக் கிளியும் கேட்குமே

உவந்து தந்த கனிகளை,

உண்டு மழலை பேசுமே.

கரிய குயில் பாடுமே

கள்ளம் இன்றிப் பாடுமே,

சிறிய மனிதன் புத்தியை

சிந்தை நொந்து பாடுமே.

-----------------------------------------

கொக்கு

கொக்கு வெள்ளைக் கொக்கு

குளத்தங் கரைக் கொக்கு

திக்கு எட்டும் சென்று,

திரும்பி வரும் கொக்கு.

வாடி நிற்கும் கொக்கு

வளைந்து நிற்கும் கொக்கு

நாடி நின்று மீனை,

நையும் இந்தக் கொக்கு.

காலைத் தூக்கி நின்று

கடவுள் அருளைக் கண்டு,

வேளை மூன்றும் உண்டு

வணங்கும் இந்தக் கொக்கு.

----------------------------------------------

சாப்பிட வா

சின்னக் கண்ணே சாப்பிடவா

சிங்காரக் கண்ணே சாப்பிடவா

வண்ணக் கிளியே சாப்பிடவா

வான வில்லே சாப்பிடவா.

கிண்ணம் நிறையச் சோறுண்டு

கிள்ளை மொழியே சாப்பிடவா

எண்ணம் நிறைய ஆசையுண்டு

இனிய அமுதைச் சாப்பிடவா.

பவளம் போன்ற வாயாலே

பேசிப் பேசிச் சாப்பிடவா

தவழும் உன்றன் கால்களினால்,

தத்தி வந்து சாப்பிடவா.

--------------------------------------------------------

சீறாப் புராணம்

உத்தம நபியின் வரலாற்றை

அழகிய தமிழில் ஓர்புலவன்

சத்துள காவிய மாய்படைத்தான் - அதுவே

சீறாப் பெரு நூலாம்.

உமறு என்ற பெரும்புலவன்

உவந் தளித்த சீறாவை,

இமய முடியில் வைத்திடுவோம் - அதில்

இலகிய இன்பம் கண்டிடுவோம்.

-------------------------------------------------

தங்கை

தங்கை என்றன் தங்கை

தளாடி வரும் தங்கை

தங்க மான தங்கை

தவழ்ந்து வரும் தங்கை.

பட்டுச் சட்டை கேட்டு

புரளி செய்யும் தங்கை

வட்ட நிலவைக் காட்டி,

வாங்கச் சொல்லும் தங்கை.

பாட்டுச் சொல்லித் தந்தால்,

பாடி ஆடும் தங்கை

பாட்டி மடியில் சென்று,

படுத்துக் கொள்ளும் தங்கை.

---------------------------------------------

தாலேலோ

கண்ணே, கண்மணியே

கையமுதே தாலேலோ

பண்ணே, பாடுங்குயிலே

பால்நிலவே தாலேலோ

மயிலே, மாங்கனியே

மரகதமே தாலேலோ

குயிலே, குலக்கொழுந்தே

குண்டுமணியே தாலேலோ.

தேனே, திருவிளக்கே

தீஞ்சுவையே தாலேலோ

மானே, மருக்கொழுந்தே

மாதவமே தாலேலோ.

--------------------------------------------

படிப்போம்

பள்ளி செல்லுவோம் - நல்ல

பாடம் சொல்லுவோம்,

துள்ளி ஆடுவோம் - மனத்

துயரை ஓட்டுவோம்.

வலிமை அடைவோம் - நல்ல

வாழ்வைக் காணுவோம்.

உளிகள் எடுப்போம் - நல்ல

சிலைகள் வடிப்போம்.

தொழிலை வளர்ப்போம் - வேலைத்

தொல்ல ஒழிப்போம்.

எழிலை வளர்ப்போம் - நல்ல

அறிவை வளர்ப்போம்.

--------------------------------------------------

பாடும் குயில்

பாடும் குயிலைப் பார்த்தேனே

பண் இசைக்க அழைத்ததுவே

ஓடும் நீரைப் பார்த்தேனே

ஓயா திரைந்து புலம்பியதே.

துள்ளும் மானைப் பார்த்தேனே

துயரம் போக்க அழைத்ததுவே

கிள்ளை மொழியைப் பார்த்தேனே

கெஞ்சி என்னை அழைத்ததுவே

வெள்ளி நிலாவைப் பார்த்தேனே

வெட்கி ஓடி மறைந்தௌவே

பள்ளிச் சிறுவரைப் பார்த்தேனே

பாடம் இன்றி அழுதனரே.

--------------------------------------------------

பட்டாசு

பட்டா சம்மா பட்டாசு

பற்றி வெடிக்கும் பட்டாசு

கட்டுக் கட்டாய்ப் பட்டாசு

கடைகள் முழுதும் பட்டாசு.

திருநாள் வந்த புதுநாளில்

தீர்ந்து போகும் பட்டாசு

உருவில் சிறிய பட்டாசு

உறுமி வெடிக்கும் பட்டாசு.

மாமா தந்த பட்டாசு

மயிலாப் பூர் பட்டாசு

பாமா பெற்ற பட்டாசு

பர்மா தேசப் பட்டாசு.

-------------------------------------------------

புதுச் சோலை

சோலை நல்ல சோலை

சிங்கார மான சோலை

மாலை வேளை கூடி

மகிழ நல்ல சோலை

விண்ணை முட்டும் மரமும்

விரிந்த நல்ல குளமும்

கண்ணைக் கவ்ரும் காட்சி,

காணக் காண இன்பம்.

நல்ல தென்றல் காற்று

நாடி வரும் சோலை

வல்ல இறைவன் தந்த,

வையப் புதுச் சோலை

-------------------------------------------------

பேதம் இல்லை

சின்னஞ் சிறு கன்னே - என்

சிந்தை அள்ளும் பண்ணே,

அண்ணன் தம்பி யோடு - தினம்

ஓடி ஆடிப் பாடு.

பொம்மை ஒன்று தாரேன் - நல்ல

பட்டுச் சட்டை தாரேன்,

அம்மா சொல்லைக் கேட்டு - நீ

அன்பை நிலை நாட்டு.

"பள்ளுப் பறையர்" என்று - குலப்

பேதம் இல்லை இன்று,

நல்ல பிள்ளை என்று - நீ

நடப் பதுவே நன்று.

-------------------------------------------------

மன்னன்

மன்னன் மன்னன் மன்னனாம்

மண்ணை ஆளும் மன்னனாம்

எண்ணம் போல எதனையும்

எடுத்துச் செய்யும் மன்னனாம்.

தலையில் தங்கத் தொப்பியாம்

தந்த யானை சொந்தமாம்

கலைகள் வாழும் கூடமாம்

கணக்கில் லாத செல்வமாம்.

குதிரை யானைச் சேனையாம்

குனிய நேரம் இல்லையாம்.

அதி காரமென்ற சாட்டையால்

அடிமை கொள்ளும் மன்னனாம்.

-------------------------------------------------

மாமா வந்தார்

மாமா வந்தார் மாமா வந்தார்

மரப் பெட்டி யோடு,

மாமி வந்தா மாமி வந்தா

மலி கை யோடு.

மாமா பொண்ணு வள்ளி வந்தா

மரப் பொம்மை யோடு,

மாமா பையன் மூர்த்தி வந்தான்

மத் தளத் தோடு.

சின்னப் பிள்ளை எனக் கெதுவும்

செய்து வந்தா ரோ,

பின்னால் வந்த பெட்டி யிலே

பூட்டி வந்தா ரோ.

-------------------------------------------------

மாம்பழம்

நல்ல நல்ல மாம்பழம்

நீண்டு பருத்த மாம்பழம்

வெல்லக் கட்டி மாம்பழம்

வாங்கித் தின்று பார்க்கலாம்.

பொன் நிறத்த மாம்பழம்

பழுத்த புதிய மாம்பழம்

சின்ன மூக்கு மாம்பழம்

சிவப்பு பச்சை மாம்பழம்

சுவை மிகுந்த மாம்பழம்

சிறுவர் விரும்பும் மாம்பழம்

குவை குவையாய் மாம்பழம்

காண வாயும் ஊறுமே.

-------------------------------------------------

மகிழ்வேன்

வண்ணத் தமிழ்ப் பாட்டெழுதி

வீர மூட்டுவேன் - நான்

வீர மூட்டுவேன்.

எண்ணத்திலே எழுவ தெல்லாம்

எழுதிக் காட்டுவேன் - நான்

எழுதிக் காட்டுவேன்.

பாப்பா பாட்டு எழுதுவதில்

பிரியம் மிகக்கொள்வேன் - நான்

பிரியம் மிகக்கொள்வேன்.

பாபா மாரைக் கண்டவுடன்

பார்த்து மகிழுவேன் - நான்

பார்த்து மகிழுவேன்.

பூனைஎலி பாட்டுப் பாடிப்

புதுமை காட்டுவேன் - நான்

புதுமை காட்டுவேன்.

வீணை சொன்ன பாட்டைச் சொல்லி

வீடு செல்லுவேன் - நான்

வீடு செல்லுவேன்.

-------------------------------------------------

மழை

சின்ன சின்னத் துளிகளாய்ச்

சேர்த்து வைதாயோ - அதை

எண்ணம் போல சிதறவிட்டு,

ஓடிச் சென்றாயோ,

மண்ணில் வாழும் உயிர்களுக்கு

மாண் பளித்தாயோ - இல்லை

எண்ணி வைத்த முத்துக்களை

அன் பளித்தாயோ.

மின்னல் இடி உன்வரவை

முன்னால் சொல்லுமே - முகில்

பின்னிப் பின்னி ஓரிடத்தில்

கூடிக் கொள்ளுமே.

-------------------------------------------------

நீ உறங்கு

மரகதமணிக் கட்டிலிலே,

மல்லிகைப்பூ மெத்தையிலே

மரகதனே நீயுறங்கு

மாண்புடனே நீயுறங்கு.

வாசனையாம் பூமலர்கள்

வாடியுறும் வேளையிலே

வாசவனே நீயுறங்கு

விண்மணியே நீயுறங்கு.

சந்தன மரமரைத்து

சரிகைப்பட்டு வைத்திருக்கேன்,

சந்திரனே நீயுறங்கு

சாந்தமுடன் நீயுறங்கு.

-------------------------------------------------

எனக்கொரு...

பாடிக் களித்திடவே - எனக்கொரு

பாவைக் குயில் வேண்டும்,

ஆடிக் களித்திடவே - எனக்கொரு

அழகு மயில் வேண்டும்.

செந்தமிழ் பேசிடவே - எனக்கொரு

சொர்ணக் கிளி வேண்டும்,

சொந்தம் மொழிந்திடவே - எனக்கொரு

செல்லப் புறா வேண்டும்.

கொஞ்சிக் குலாவிடவே - எனக்கொரு

குழந்தைக் கனியமுது வேண்டும்,

நெஞ்சம் இனித்திடவே - கதைகள்

நித்தம் நித்தம் வேண்டும்.

-------------------------------------------------

பட்டம்

பட்டம் பட்டம் பட்டமாம்

பறக்கும் வர்ணப் பட்டமாம்

பட்டம் கட்டி ஆடலாம்

பாலர் களே வாருங்கள்.

மேகத் தோடு மோதிட

முந்திச் செல்லும் பட்டமே

வேகம் கொஞ்சம் கூடினால்,

விண்ணை எட்டிப் பார்க்கலாம்.

வண்ண வண்ணப் பட்டமே

வளைந்து செல்லும் பட்டமே

கண்ணை மூடிப் பறந்திடில்,

காற் றடித்துத் தள்ளுமே.

-------------------------------------------------

சக்தி பிறக்குது

சங்கொலி கேட்குது

சக்தி பிறக்குது

சீறி எழுந்திடடா - தம்பி

சீறி எழுந்திடடா.

சுடரொளி வானைச்

சுற்றி வளைக்குது,

சோதி பிறக்குதடா - தம்பி

சோதி பிறக்குதடா.

-------------------------------------------------

நல்ல தம்பி

நல்ல தம்பி என்றால்,

நாடு உன்னைப் போற்றும்,

கள்ளன் கபடன் என்றால்,

கண்ணால் ஆரும் பாரார்.

சொல்லில் உண்மை யென்றால்,

சோற்றுப் பஞ்சம் இல்லை

எள்ளி வாழ நினைத்தால்,

எச்சில் கூட இல்லை.

அறிஞர் உறவு என்றால்,

அல்லும் பகலும் இன்பம்

சிறியோர் உறவு என்றால்,

சொல்லும் செயலும் துன்பம்.

-------------------------------------------------

நாய்க்குட்டி

வெள்ளை, வெள்ளை நாய்க்குட்டி

வாங்கி வந்த நாய்க்குட்டி

செல்ல மான நாய்க்குட்டி

சேர்ந்து வாழும் நாய்க்குட்டி.

சின்னப் பிள்ளை போலவே

சுற்றிச் சுற்றி வந்திடும்,

சொன்ன வேலை முழுவதும்

செய்யும் இந்த நாய்க்குட்டி.

நன்றி கெட்ட மாந்தர்க்கு

நல்ல பாடம் சொல்லிடும்

உண்மை யான நாய்க்குட்டி

உறுதி யான நாய்க்குட்டி.

-------------------------------------------------

நட்சத்திரமே

நட்சத் திரமே நட்சத் திரமே

நினைப்ப தென்ன வோ?

கிட்ட வந்து போவ தாலே,

நட்ட மென்ன வோ?

வட்ட நிலவை வளைத்து நிற்கும்

வீர மென்ன வோ?

கட் டவிழ்ந்த மொட்டுப் போலக்

களிப்ப தென்ன வோ?

வெட்ட வெளி வான் முகட்டின்

வெள்ளிப் பந்த லோ?

திட்ட மிட்டு இறைவன் செய்த,

தீபக் கோல மோ?

-------------------------------------------------

மாமறை

ஒருவன் இறைவனென்று - உலகில்

ஓதிக் களித்திட வே,

கருணை மழை பொழிவாய் - இறைவா

காத்து அருள் புரிவாய்.

மாமறை செல்வமதை - சிந்தை

மாந்திக் களித்திட வே,

சேமநல மருள்வாய் - இறைவா

சாரும் பிழை பொறுப்பாய்.

வஞ்சம் நிறைமாந்தர் - விரிக்கும்

வலைகளில் வீழா மல்,

தஞ்சம் அளித்திடுவாய் - இறைவா

தவறா தெமைக் காப்பாய்.

-------------------------------------------------

வண்டி

வண்டி நல்ல வண்டி

வண்டி மாட்டு வண்டி

சண்டித் தனம் இன்றி

சவாரி போகும் வண்டி.

கல்லும் முள்ளும் தாண்டி

காற்றைப் போலச் செல்லும்

பள்ளம் மேடு கண்டு,

பயந் திடாத வண்டி.

தள்ளு வண்டி இல்லை

தாவிச் செல்லும் வண்டி

எல்லா ஊரும் கண்ட

ஏற்ற மான வண்டி.

-------------------------------------------------

வண்டுகளா!

சின்னச் சின்ன வண்டுகளா,

சிங்கார வண்டுகளா,

வண்ண மலர்ச் சோலையிலே,

என்ன வேலை வண்டுகளா?

வெள்ளை நிற மல்லிகையில்

வந்திருக்கும் வண்டுகளா,

கள்ள மாக மதுவினை(க்)

குடிப்பதென்ன வண்டுகளா?

சிவப்பு நிற ரோசாவை(ச்)

சுற்றுகின்ற வண்டுகள்ள்,

சிவப்பில் என்ன மோகமோ

சிரிப்பதென்ன வண்டுகளா?

-------------------------------------------------

வள்ளம்

அமைதி யான கடலிலே

அழகு வள்ளம் போகுது

அழகு வள்ளம் போகுது.

சுமைகள் தாங்கி கடலினிலே

சீமை வள்ளம் போகுது

சீமை வள்ளம் போகுது.

அண்ணன் தங்கை யோடு

அந்தி வேளை நாங்கள்

அந்தி வேளை நாங்கள்.

எண்ணம் போலப் பாடி,

உலாவ நல்ல வள்ளம்

உலாவ நல்ல வள்ளம்.

பள்ளம் மேடு இல்லா(ப்)

பரந்த கடல் மீது

பரந்த கடல் மீது

துள்ளி ஓடும் மீனைப்போல்

துன்பம் இன்றிச் செல்லுது

துன்பம் இன்றிச் செல்லுது.

-------------------------------------------------

செல்வா வா

மழலைச் செல்வா வாவாவா,

முத்தம் ஒன்று தாதாதா,

குழந்தைக் கண்ணே வாவாவா,

குங்குமச் சிமிழைத் தாதாதா.

செல்வம் எல்லாம் நீதானே

சேர்ந்து பாட வாவாவா,

கள்ளம் விட்டு என்னுடனே

கல்வி கற்க வாவாவா.

கன்னம் குழிய நீசிரித்தால்,

கற்கண் டெனவே இனிக்கிறதே.

விண்ணில் வந்த முழுமதியும்

வெட்கி ஓடி ஒளிகிறதே.

குழலும் யாழும் இன்பமில்லை

கூத்தும் பாட்டும் இன்பமில்லை

மழலை உன்றன் மொழிக்கிடு,

மண்ணில் ஒன்றும் இல்லையே!

-------------------------------------------------

வெள்ளி நிலா

வெள்ளிநிலா வெள்ளிநிலா

வளைந்த தென்னவோ?

பிள்ளைபோல ஓடிஓடிப்

போவ தென்னவோ?

கிழேவந்தால் உன்னையாரும்

கண்டு கொள்வாரோ?

மேலேநின்று சாலம்செய்தால்,

விட்டுச் செல்வாரோ?

குளிரைஅள்ளி குளிரைஅள்ளி

கொடுப்ப தென்னவோ?

மிளிரும்வட்ட மீன்களோடு,

மிதப்ப தென்னவோ?

சொல்ல வெட்கம் உனக்கிருந்தால்,

சொல்லு என்னிடம்

செல்லமாக உன்னைவைத்து(க்)

கொஞ்சிப் பேசுவேன்.

-------------------------------------------------

வேடிக்கை

வண்ண மலரே வண்ண மலரே

விஷயம் தெரியுமா? - உன்

கிண்ண மதுவை வண் டெடுத்து

கிளையில் சேர்க்குது - மரக்

கிளையில் சேர்க்குது.

புள்ளி மானே புள்ளி மானே

புதுமை தெரியுமா? - உன்

கள்ள மில்லாப் பார்வை கண்டு

கணை தொடுக்கிறான் - வேடன்

கண தொடுக்கிறான்.

வெள்ளைக் கறையான் வெள்ளைக் கறையான்

வேடிக்கை அறிவாயோ - உன்

நல்ல புற்றில் பாம்பு வந்து

நடன மாடுது - கபட

நடனம் ஆடுது.

செல்லக் கிளியே செல்லக் கிளியே

சேதி தெரியுமா? - உன்

சொல்லைக் கேட்டு மகிழ்ச்சி கொள்ள,

சிறையில் வைக்கிறான் - மனிதன்

சிறையில் வைக்கிறான்.

ஆற்று மீனே ஆற்று மீனே

ஆபத் தறிவாயோ? - உன்

கூற்று வந்து புழு வடிவில்

காத்திருக்குது - கவனம்

காத்திரு க்குது.

-------------------------------------------------

(புகைப்படம்)

ஆசிரியராகப் பணிபுரியும் கவிஞர் சாரணகையூம், பதுளையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கவிஞர் திலகம் அப்துல் காதர் லெப்பை அவர்களின் மாணவர். ஆசிரியத் தொழிலோடு, எழுத்துத் துறையிலும் மின்னுகிறார். இவரது படைப்புக்கள் வீரகேசரி, தினகரன், சுதந்திரன், தினபதி, சிந்தாமணி, ஈழநாடு முதலிய பத்திரிகைகளிலும் தமிழ் நாட்டிலிருந்து வெளியாகும் மணிவிளக்கு, முஸ்லிம் முரசு, நல்வழி, தீபம் ஆகிய சஞ்சிகைகளிலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

கவிஞர் சாரணாகையூம் இதுவரை நபிகள் நாயகம், குர்-ஆன்-ஹதீஸ், குழந்தை இலக்கியம், கவிதை நெஞ்சம் ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

குழந்தை இலக்கியத் துறையிலே ஈடுபாடு கொண்ட இவர், சிறுவர்களுக்காக 'சிறுவர் பாரதி' என்னும் பத்திரிகை ஒன்றையும் வெளியிட்டு வந்தார்.

-------------------------------------------------

இனிக்கும் உரைகள்

ஒவ்வொரு நற்செய்கையும் தர்மமாகும். உங்கள் சகோதரனைச் சிரித்த முகத்துடன் சந்திப்பதும், உங்கள் பாத்திரத்திலிருந்து அவனது பாத்திரத்திற்கு தண்ணீர் வார்ப்பதும் உயர்ந்த பண்புகளாகும்.

- மாநபி முஹம்மத் (ஸல்)

அன்பு, பொறை, தயை, தாட்சண்யம் இவற்றால் கோபத்தை அடக்குங்கள். ஒருவருக்கும் தீங்கு செய்யாதீர்கள். உயர் சிதனையில் நின்று விளங்குங்கள்.

- அன்னி பெஸன்ட்

தெய்வத்தன்மை, மனிதத் தன்மை ஆகிய இரண்டும் மனிதனிடம் குடி கொண்டுள்ளன. அறிவு, அஹிம்சை, அன்பு, தைரியம், தியாகம் ஆகிய குணங்களும் மனிதனுக்குத் தெய்வத் தன்மையளிக்கக் கூடியவை.

- எஸ். டி. கோல்ரிட்ஜ்

தங்கள் இதயத்தை எந்த அளவுக்குப் பக்குவப்படுத்திக் கொள்கிறார்களோ, அந்த அளவுக்குத்தான் அவர்கள் வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.

- மெக்காலே.

---------------------

சாரணா கையூம்

* ஆசிரியராகப் பணி புரியும் இப் பாவலர் 'சிறுவர் பாரதி' என்ற இதழின் ஆசிரியராகவும் கடமையாற்றுகின்றார். கவிதை நெஞ்சம், குழந்தை இலக்கியம், நபிகள் நாயகம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இசைப் பாடல்களைப் பாட வல்லவர்.

- செம்மாங்கனி

* பதுளையை வசிப்பிடமாகக் கொண்ட கவிஞர் சாரணா கையூம் குழந்தை இலக்கியத் துறையிலும் ஈடுபாடுடையவர் என்பதற்குச் சான்றாக, 'குழந்தை இலக்கியம்' என்னும் கவிதை நூலை வெளியிட்டுள்ளார்.

- இளம்பிறை

* ஈழத்துக் குழந்தைக் கவிஞர்களுள் சோமசுதரப் புலவர், நல்லதம்பி, அல்லையூர் செல்லையா, பண்டிதர் க. வீரகத்தி, நாகராஜன், வேந்தனார், அம்பிகைபாகன், சத்தியசீலன், அமிர்தநாதன், சுபைர், சாரணாகையூம், கோசுதா முதலியோர் குறிப்பிடக்கூடியவர்கள்.

- மொழியியற் கட்டுரைகள்

* என்னைவிட ஆர்வத்துடன் என் குழந்தைகள் உங்கள் சிறுவர் பாடல்களைப் படித்து இன்புற்றனர். யாருக்காக எழுதினீர்களோ அவர்களின் ஆதரவு தங்கட்கு நிச்சயம் கிட்டும் - கிட்டிவிட்டது என்பதற்கு என் குழந்தைகளின் ஆர்வம் நல்ல எடுத்துக் காட்டாகும்.

- நாக. முத்தையா B. Com. சென்னை.

விலை ரூபா. 5/-

---

Printed at Developrint, 69, Albion Road, Colombo-9

---